தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று இரவு 7:30 மணிக்கு கரூரில் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வந்தடைந்தார். 12 மணிக்கு அவர் வருவார் என கூறப்பட்ட நிலையில் விஜய் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 9 ஆண்கள் என 39 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் சுற்று பயணத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கரூர் மருத்துவமனையில் தற்போது 52 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இரண்டு பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 39 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
