பயமே இல்லையா..? கோப்புகளுக்கு அடியில் லஞ்சப் பணம்…! வசமாக சிக்கிய அரசு ஊழியர்… போலீஸ் அதிரடி…!!

By Devi Ramu on தை 24, 2026

Spread the love

கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் நகல் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய பதிவு எழுத்தர் ஹரிஹரன் என்பவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வெள்ளகிணறு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், தனது தந்தையின் சொத்தை விற்பதற்காகத் தொலைந்து போன வாரிசு சான்றிதழின் நகலைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதற்கு ஒப்புதல் கிடைத்த நிலையிலும், சான்றிதழைத் தர ரூ.7,000 பணம் வேண்டும் என்று ஹரிஹரன் கறாராகக் கேட்டுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த விஜயகுமார், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை விஜயகுமார் கொடுத்தபோது, அலுவலகக் கோப்புகளுக்கு அடியில் மறைத்து வைத்த ஹரிஹரனை லஞ்ச ஒழிப்புப் படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். வாரிசு சான்றிதழ் தொடர்பான லஞ்ச வழக்கில் சென்னையில் ஒரு அதிகாரிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே, கோவையில் அதே போன்ற குற்றத்திற்காக மற்றொருவர் சிக்கியிருப்பது அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சப் புகார்கள் தொடர்பாகத் தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.