மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள வெர்சோவாவில், பொறாமை மற்றும் சந்தேகத்தின் உச்சகட்டமாக அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 வயது மாணவி ஒருவரின் கூந்தல் அழகாக இருப்பதாக, அவரது தோழியின் காதலன் இன்ஸ்டாகிராமில் வர்ணித்துப் பேசியதே இந்த வன்முறைக்குக் காரணமாகியுள்ளது.
கடந்த மார்ச் 25-ம் தேதி நள்ளிரவு, ஐஸ்கிரீம் டெலிவரி என நினைத்துக் கதவைத் திறந்த அந்த மாணவியை, அவரது தோழி மற்றும் இருவர் சேர்ந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்துள்ளனர். “உனக்கு முடி தானே முக்கியம்?” எனக் கத்திக் கொண்டே, கத்தரிக்கோலால் அந்த மாணவியின் கூந்தலை வெட்டி எறிந்துள்ளனர்.
இந்தச் செயலை மற்ற இரு தோழிகள் வீடியோ எடுத்து மிரட்டியது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், வெர்சோவா போலீசார் லைபா மற்றும் அவரது தோழிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். காதலன் வர்ணித்த ஒரே காரணத்திற்காக இந்தப் பழிவாங்கல் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
