சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதிசெய்யவும், விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும் இ-கேஒய்சி சரிபார்ப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வீடுகளுக்கு வழங்கப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சிலிண்டர்கள், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு உணவகங்களுக்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், இறந்தவர்களின் பெயர்களிலும், ஒரே நபரின் பெயரில் பல்வேறு இணைப்புகளும் இருப்பதை கண்டறிந்து, மாதம் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த ஆதார் அடிப்படையிலான கேஒய்சி நடைமுறை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த இ-கேஒய்சி பதிவை முடிப்பதற்கான காலக்கெடு நுகர்வோரின் வசதிக்காக பலமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. முதலில் ஆகஸ்ட் 16-ஆம் தேதியாகவும், பின்னர் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 23-ஆம் தேதியாகவும் கடைசி நாள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுமக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கும் வகையில், இந்த அவகாசத்தை வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு மேலும் நீட்டித்துள்ளது. எனவே, பாரத், இண்டேன் உள்ளிட்ட நிறுவனங்களின் கேஸ் இணைப்பைப் பயன்படுத்தி, இதுவரை தங்களது கேஒய்சி விவரங்களைப் புதுப்பிக்காதவர்கள் இந்த கூடுதல் அவகாசத்தைப் பயன்படுத்தி உடனடியாக அதனை அப்டேட் செய்துகொள்வது அவசியமாகும்.
