ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் சொந்தமாக தயாரிக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தலைவர் 173 என தற்காலிக டைட்டிலும் வைக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி படத்தை இயக்குவதாக முதலில் அறிவிப்பு வெளியானது.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் நடந்த தலைவர் 173 படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சுந்தர் சி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். ஆனால் சில நாட்களுக்கு பிறகு சுந்தர் சி இந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக திடீரென அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தலைவர் 173 படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அல்லது மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் அல்லது ஜனநாயகன் பட இயக்குனர் எச் வினோத் அல்லது டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து என இந்த 4 பேரில் ஒருவர் டைரக்ட் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்தன.
இதில் தனித்தனியாக அந்தந்த இயக்குனர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கதை கேட்டதாகவும் தகவல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் தலைவர் 123 படத்தின் இயக்குனர் யார் என்பதில் குழப்பமே நீடித்து வந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று தலைவர் 173 படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி தான் தலைவர் 173 படத்தை இயக்க உள்ளதாக இன்று ராஜ்கமல் நிறுவனம் சார்பில் அதிகாரபூர்வமான வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். வரும் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அடுத்ததாக பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை தான் இயக்குவதாக இருந்தது. திடீரென சிபி சக்கரவர்த்தி ரஜினிகாந்த் படத்தை டைரக்ட் செய்ய எப்படி கமிட் ஆனார் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைவர் 173 படம் குறித்து இதுவரை பல இயக்குனர்கள் பெயர் லிஸ்ட்டில் இருந்த நிலையில் சிபி சக்கரவர்த்தி பெயர் அந்த லிஸ்ட்டிலேயே இல்லையே, என்ற குழப்பமும் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
