பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு 75 வயது பூர்த்தியானதும் அவர்கள் தீவிர அரசியலில் இருந்து விலகி ‘வழிகாட்டுதல் குழு’வுக்கு மாற்றப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், தற்போதைய பெரிய தலைவர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்துமா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்வியைக் கேட்டதும் சற்று முகம் மாறிய அமித்ஷா, பிறகு புன்னகைத்தவாறு, “எங்கள் கட்சியைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், மேற்கு வங்கத்தைப் பற்றி கவலைப்படுங்கள்” என்று சாதுர்யமாகப் பதிலளித்து மழுப்பினார். மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கையுடன் பேசிய அமித்ஷா, ஆளும் மம்தா பானர்ஜி அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
குறிப்பாக ஊடுருவல், ஊழல் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அவர் விமர்சித்தார். வரும் ஏப்ரல் 15, 2026-ல் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமையும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடைந்துள்ள சூழலில், அமித்ஷா அளித்த இந்தப் பதில் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
