சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் சென்சார் வாரியத்தின் கடும் நெருக்கடிக்குப் பிறகு ஒருவழியாக (U/A) சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தில் இடம்பெற்றிருந்த அரசியல் வசனங்கள் மற்றும் வன்முறைக் காட்சிகள் என மொத்தம் 25 இடங்களை மாற்றவோ அல்லது நீக்கவோ தணிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இந்தி திணிப்பு குறித்த கடுமையான விமர்சனங்கள், “தீ பரவட்டும்” போன்ற அரசியல் முழக்கங்கள் மற்றும் சில சர்ச்சைக்குரிய வார்த்தைகள் படத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன. மேலும், பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரை தொடர்பான சில காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது.
வன்முறை காட்டும் காட்சிகளைப் பாதியாகக் குறைக்க அறிவுறுத்தியுள்ள தணிக்கைக் குழு, சில குறிப்பிட்ட வசனங்களில் “இந்தி” என்ற வார்த்தையையே நீக்க செய்துள்ளது. தபால்துறை மற்றும் பொதுத்தேர்வு தொடர்பான சில விவாதக் காட்சிகளில் இது ‘கற்பனையே’ என்ற அறிவிப்பைத் திரையில் காட்ட வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது. இவ்வளவு மாற்றங்களுக்குப் பிறகு இப்படம் நாளை திரைக்கு வரத் தயாராக உள்ளது. சமூக வலைதளங்களில் நீக்கப்பட்ட வசனங்கள் வைரலாகி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
