தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸின் ஃபிகெரோவா காரிடார் பகுதியில், “ஹூவர் கிரிமினல்ஸ்” என்ற சக்திவாய்ந்த சட்டவிரோத கும்பல் நடத்தி வந்த பயங்கரமான பாலியல் கடத்தல் நெட்வொர்க்கை காவல்துறையினரும் அரசு வழக்கறிஞர்களும் அதிரடியாக முறியடித்துள்ளனர். உள்ளூர் மக்களால் “தி பிளேட்” என்று அழைக்கப்படும் இப்பகுதியில், ‘ஆபரேஷன் ப்ரோக்கன் பிளேட்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையின் மூலம் குறைந்தது பத்து விபச்சாரத் தலைவர்கள் உட்பட 25 பாலியல் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பல் பெண்களை வெறும் 40 டாலருக்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும், தங்களைப் பாதுகாக்க யாரும் இல்லாத ஆதரவற்ற பெண்களையும், காப்பகங்களில் உள்ள சிறுமிகளையும் குறிவைத்து விலைக்கு வாங்கி இந்த கொடூர தொழிலுக்குள் தள்ளியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
1960-களின் இறுதியில் தோன்றி, 80-களில் போதைப்பொருள் கடத்தலால் வலுப்பெற்ற இந்த ஹூவர் கும்பல், பாதிக்கப்பட்டவர்கள் மீது அச்சுறுத்தல் மற்றும் வன்முறை மூலம் தங்களின் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தி வந்துள்ளது. ஆரம்பத்தில் பணம், ஆடம்பர ஆடைகள், பாசம் மற்றும் புகலிடம் தருவதாகக் கூறி இளம் சிறுமிகளை மயக்கி இழுக்கும் இ கும்பல், பின்னர் அவர்களை வன்முறை, போதைப்பழக்கம் மற்றும் பயத்தின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் தெருவோரங்களில் வாடிக்கையாளர்களைக் கவர வைக்கப்பட்டு, பின்னர் தரமற்ற மோட்டல் அறைகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தங்களின் உளவியல் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த பாதிக்கப்பட்டவர்களின் உடலில் முத்திரை குத்துவது, அவர்களைக் கடித்தும் குத்தியும் கொடூரமாகத் தாக்குவது போன்ற அத்துமீறல்களிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு சம்பவத்தில், பெண்ணைக் கடித்துக் குதறிய காயத்தைப் புகைப்படம் எடுத்து சக ரவுடிகளுக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பி மகிழ்ந்த கொடூரமும் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த கும்பலின் கட்டுப்பாட்டில் இருந்த பெண்கள் மிக மோசமான மருத்துவ மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். கலீத் மௌட்டன் என்ற கடத்தல்காரன், கர்ப்பமடைந்த ஒரு பெண்ணைக் கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்ததோடு, கடுமையான இரத்தப்போக்கு ஏற்படும் என்று தெரிந்தே, கருக்கலைப்பு செய்யப்பட்ட அதே நாளில் அவரை மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபட உத்தரவிட்டு மிரட்டியுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சதித்திட்டத்தின் பின்னணியில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸின் தலைமை வழக்கறிஞர் பில் எஸ்ஸெய்லி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் பலரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் காவல்துறைத் தலைவர் ஜிம் மெக்டொனெல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
