பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல்முறையாகச் சாமானிய மக்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் இருந்து 50 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரத்யேக தேர்வு நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தேர்வு முறை குறித்து ஆரம்பம் முதலே பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், இதிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளரான மாயா நாட்டாசன் என்பவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
யூடியூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர், நிகழ்ச்சியின் நடுவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஏற்கனவே 20 பேரைத் தேர்ந்தெடுத்துவிட்டு, மற்றவர்களுக்குக் கடினமான டாஸ்க்குகளைக் கொடுத்து தேவையின்றி கஷ்டப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். மேலும், போட்டியாளர்களின் தனிப்பட்ட மற்றும் வலிகள் நிறைந்த ரகசியங்களைக் கட்டாயமாகக் கேட்டறிந்ததாகவும், தனது கணவர் செய்த துரோகம் மற்றும் பொய்ப் புகார்கள் குறித்துத் தான் பகிர்ந்துகொண்டபோது, அதில் ‘சுவாரஸ்யம் இல்லை’ என நிகழ்ச்சிக்குழுவினர் அலட்சியமாகக் கூறியதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, டிஆர்பி ரேட்டிங்கிற்காகத் தான் பேசியதை முழுமையாகக் காட்டாமல், தங்களுக்குத் தேவையானதை மட்டும் வெட்டி ஒட்டித் தன்னைத் தவறாகச் சித்தரித்துவிட்டதாக மாயா குற்றம் சாட்டியுள்ளார். வாழ்க்கையில் பல துன்பங்களைச் சந்தித்து முன்னேறத் துடிக்கும் தங்களைப் போன்ற சாமானியர்களின் வலிகளை, நிகழ்ச்சிக்குழுவினர் தங்களின் லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டது மிகுந்த மனவேதனையை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட திறமைகள் இருந்தால் மட்டுமே வாய்ப்பு என்று முன்கூட்டியே சொல்லியிருந்தால் தாங்கள் விண்ணப்பித்திருக்கவே மாட்டோம் என அவர் கூறியுள்ள பேட்டி, தற்போது சமூக வலைதளங்களில் பிக் பாஸ் தேர்வு முறை குறித்த தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
