திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் பகுதியில், தனது கணவர் மற்றும் மூன்று வயது குழந்தையைப் பிரிந்து கள்ளக்காதலனுடன் சென்ற மகளைத் தந்தையே கத்தியால் அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிம்யா என்ற இளம்பெண்ணிற்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்த நிலையில், இன்ஸ்டாகிராம் வழியாக அறிமுகமான நபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மகளைக் காணவில்லை எனத் தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் சிம்யாவை கன்னியாகுமரியில் மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
வீட்டிற்கு வந்த மகளிடம் குடும்ப மானத்தைக் கெடுத்துவிட்டு ஏன் இப்படிச் செய்தாய் என ஆறுமுகம் கேள்வி எழுப்பியபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற தந்தை, வீட்டில் இருந்த கத்தியை எடுத்துச் சிம்யாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த மகளின் அருகே அமர்ந்து அவர் அழுது கொண்டிருந்த நிலையில், வெளியில் சென்று திரும்பிய தாய் இதைக் கண்டு அலறினார். தகவல் அறிந்து வந்த வீரபாண்டி போலீசார், சிம்யாவின் உடலைக் கைப்பற்றியதுடன் மகளைக் கொன்ற தந்தையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
