சமீபத்தில் சிவராத்திரி பண்டிகையின் போது, டிஜிட்டல் படைப்பாளரான யஷ் பரத்வாஜ் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மூன்று முதல் நான்கு கிளாஸ் பாங் (கஞ்சா கலந்த பானம்) குடித்த அனுபவத்தைப் பகிரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடக்கத்தில் உற்சாகமாகத் தெரிந்த இந்த அனுபவம், சிறிது நேரத்திலேயே அவருக்குப் பயங்கரமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பானம் குடித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் ஜிலேபி சாப்பிட்ட போது, திடீரென அவரது கண்கள் இருட்டாகி, பார்வை மங்கத் தொடங்கியதாக அவர் அந்த வீடியோவில் விவரித்துள்ளார்.
பாங் குடித்த பிறகு ஏற்பட்ட விளைவுகள் குறித்து யஷ் கூறுகையில், அவருக்கு மூச்சு விடுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாகவும், இதயத் துடிப்பு தாறுமாறாகி உடல் தன் கட்டுப்பாட்டை இழந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். நிலைமை மோசமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு இரண்டு ஊசிகள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரே, மெல்ல மெல்ல அவரது உடல்நிலை சீராகியுள்ளது. இந்தத் தருணம் தனக்கு ஒரு மரண பயத்தையே காட்டியதாக அவர் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்த கசப்பான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் யாரும் பாங் போன்ற போதைப் பொருட்களை முயற்சி செய்ய வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒவ்வொருவரின் உடலமைப்பும் மாறுபட்டது என்பதால், இத்தகைய பானங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்றும், பண்டிகை கால உற்சாகத்திற்காகத் தனது வாழ்க்கையைப் பணையம் வைக்க வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தற்போது ஹோலி பண்டிகை வரவிருக்கும் நிலையில், பாங் குடிக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோ பரவி வருகிறது.
