உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் திருமணத்தின் பெயரில் ஒரு குடும்பத்தையே மயக்கமருந்து கொடுத்து கொள்ளையடிக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரோசாபாத்தைச் சேர்ந்த சச்சின் என்ற இளைஞருக்கு, சில இடைத்தரகர்கள் மூலம் மதுராவில் ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக சச்சின் தனது தந்தை, சகோதரர் மற்றும் சகோதரியுடன் மதுராவிலுள்ள ஒரு விடுதிக்கு நீதிமன்றத் திருமணம் செய்துகொள்ள வருகை தந்துள்ளார்.
அங்கு மணப்பெண் வீட்டார் கொடுத்த சிற்றுண்டியைச் சாப்பிட்ட மணமகன் உட்பட ஐந்து பேர் மயக்கமடைந்து விழுந்தனர். பெண் வீட்டாரின் இந்த சதித்திட்டத்தை உணர்ந்த மணமகனின் சகோதரி மது, அந்த சிற்றுண்டியைச் சாப்பிடாததால் தப்பியதுடன், உடனடியாக அறையைப் பூட்டிக்கொண்டு தனது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
மேலும் மணமகனின் சகோதரி சத்தமிட்டு ஆட்களைத் திரட்டியதால், கொள்ளை முயற்சியில் ஈடுபடவிருந்த பெண் வீட்டார் மற்றும் இடைத்தரகர்கள் அங்கிருந்து தப்பியோடினர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது திருமணத்தின் பெயரில் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
இந்நிலையில் தலைமறைவாக உள்ள மணப்பெண் வீட்டார் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர்களைப் பிடிக்க சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மணமகனின் சகோதரி காட்டிய துரிதமான சமயோசித புத்தியால் ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
