இன்றைய டிஜிட்டல் யுகத்தில் உணவு முதல் அனைத்தும் இணையவழியில் கிடைக்கும் நிலையில், கனடாவில் இருக்கும் மணமகனுக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த மணமகளுக்கும் ஆன்லைனில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. கனடாவில் பணியாற்றி வரும் சுகாஷ் என்பவருக்கும், உடுப்பியைச் சேர்ந்த மேக்னாவிற்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெற உள்
ள நிலையில், அதற்கு முன்பாக நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிச்சயதார்த்த விழாவிற்குச் சுகாஷிற்கு விடுமுறை கிடைக்கவில்லை. இதனால் இரு வீட்டாரும் கலந்து பேசி, நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த வைபவத்தை நடத்த முடிவு செய்தனர்.
உடுப்பியில் உள்ள ஒரு மண்டபத்தில் மேக்னா மற்றும் உறவினர்கள் சூழ விழா நடைபெற்றபோது, மணமகன் சுகாஷ் கனடாவிலிருந்து காணொலி காட்சி (Video Call) மூலமாகப் பங்கேற்றார். இதற்காக மண்டபத்தில் பெரிய எல்.இ.டி திரை அமைக்கப்பட்டு, அதன் முன்னிலையில் சம்பிரதாய முறைப்படி சடங்குகள் செய்து நிச்சயம் செய்யப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 12 மணி நேர கால வித்தியாசம் இருந்தபோதிலும், உடுப்பியில் பகல் நேரத்தில் விழா நடந்தபோது சுகாஷ் கனடாவில் நள்ளிரவு நேரத்தில் உற்சாகமாக இதில் கலந்து கொண்டார். குடும்பத்தினரின் முன்னிலையில் புதுமையான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
