உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவுன் பகுதியில் பெரும் மலைச்சரிவு ஒன்று நொடிப் பொழுதில் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையின் ஒரு பகுதி திடீரென பிளந்து, மண் மற்றும் பாறைகளுடன் வேகமாகக் கீழே சரிந்து விழுந்த விபத்தின் கொடூரக் காட்சிகள் கேமராவில் பதிவாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
இப்பகுதியில் சமீபத்தில் பெய்த பலத்த மழை மற்றும் உயரமான மலைப் பகுதிகளில் பொழிந்த பனிப்பொழிவு காரணமாகவே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாறைகள் மற்றும் இடிபாடுகள் சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மீட்புக் குழுவினர் விரைந்து சென்று பாதைகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரகாண்டின் உத்தரகாசி, சமோலி, நைனிடால், அல்மோரா மற்றும் பித்தோராகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. இமயமலைப் பகுதியின் சரிவுகளில் நிலவும் இந்த ஆபத்தான வானிலை காரணமாக, ஆபத்தான மலைப் பாதைகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
