ஷாக் நியூஸ்…. தமிழகத்தில் கனமழை…. தண்டவாளத்தில் சரிந்த மலை…. அதிர்ஷ்டவசமாகத் தப்பிய பிலாஸ்பூர் – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்…!

By Nanthini on ஐப்பசி 22, 2026

Spread the love

நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக கேரளா – தமிழ்நாடு எல்லைப் பகுதியான பாறசாலை அருகே பிலாஸ்பூர் – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தொடர் மழையால் தண்டவாளத்தின் அருகில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் மண் சரிந்து விழுந்ததால், ரயிலின் இன்ஜின் பகுதியிலிருந்த 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகின. உடனடியாகச் செயல்பட்ட ரயில்வே நிர்வாகம், மீட்பு ரயிலை சம்பவ இடத்திற்கு அனுப்பிப் பணிகளை முடுக்கிவிட்டது.

இந்தத் திடீர் விபத்தில் நல்வாய்ப்பாகப் பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றிப் பாதுகாப்பாகத் தப்பினர். பாதிக்கப்பட்ட ரயிலிலிருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக பேருந்துகள் மூலம் தங்களது இடங்களுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகள் அனைவருக்கும் உரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு அசௌகரியங்கள் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

   

தற்போது தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வரும் நிலையில், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக நாகர்கோவில் – திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் இடையே இயக்கப்படும் 6 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சீரமைப்புப் பணிகள் முழுமையடைந்த பின்னரே அப்பாதையில் ரயில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.