சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் வைத்தீஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, காரில் மீண்டும் சென்னை நோக்கிப் புறப்பட்டனர். புதுச்சேரி அருகே பாகூர் – கன்னியக்கோவில் சாலையில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு வாகனத்திற்கு வழிவிட ஓட்டுநர் காரை சாலையோரமாக ஒதுக்கியுள்ளார்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், பருவமழை காரணமாகத் தண்ணீர் நிரம்பி ஓடிய சாலையோர சித்தேரி வாய்க்காலுக்குள் பாய்ந்து கவிழ்ந்தது. காரின் பாதிப் பகுதி தண்ணீரில் மூழ்கிய போதிலும், உள்ளே இருந்த 4 வயது சிறுமி உட்பட 5 பேரும் உடனடி சுதாரிப்புடன் செயல்பட்டு, லேசான காயங்களுடன் பத்திரமாக வெளியேறி உயிர் தப்பினர்.
தகவலறிந்து வந்த மீட்புப் படையினரும் காவல்துறையினரும் காரை கிரேன் மூலம் வெளியே எடுத்தனர். மேலும், தொடர் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் இந்த வாய்க்கால் பகுதியில் உடனடியாகத் தடுப்புச் சுவர்கள் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
