மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் கைகாடா பகுதியில் இசை நிகழ்ச்சிக்குச் சென்ற 17 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தார். விசாரணையில், அவரது உறவினரான பிரகலாத் தாஸ் என்பவர் சிறுமியை நள்ளிரவில் கடத்திச் சென்று பாலியல் ரீதியாகத் தாக்கி, பின்னர் கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து அந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
குற்றம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்துவதற்காக காவல்துறையினர் பிரகலாத் தாஸை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர் காவல்துறையினரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதனால் தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இம்மாநிலத்தில் பாலியல் குற்றவாளி ஒருவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த ஜூலை மாதம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பரூய்பூர் பகுதியில் 11 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரவாஸ் மொண்டல் என்பவரும், தப்பியோட முயன்றபோது இதேபோன்று போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
