திடீரென ரூட்டை மாற்றிய அண்ணியார்…. “20 + 1, கூடவே துணை முதல்வர் பதவி”…. தேமுதிக வைத்த டிமாண்ட்…. டென்ஷனில் திமுக, அதிமுக….!

By Nanthini on மாசி 2, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவின் அதீத கோரிக்கைகள் திராவிடக் கட்சிகளிடையே பெரும் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 20 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்ற பிரேமலதாவின் பிடிவாதமான டிமாண்ட், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு தரப்பையுமே யோசிக்க வைத்துள்ளது. அதிமுக தரப்பில் 6 முதல் 10 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகவும், திமுகவோ அதைவிடக் குறைவான எண்ணிக்கையிலேயே பேச்சுவார்த்தையைத் தொடங்க விரும்புவதாகவும் தகவல்கள் கசிகின்றன. இந்த இடப்பங்கீடு இழுபறியால், தேமுதிகவின் அரசியல் பேரம் தற்போதைக்கு முட்டுக்கட்டையில் நிற்கிறது.

இதற்கிடையில், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் பேசிய கருத்துக்கள் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல அமைந்துள்ளன. “பிரேமலதாவை துணை முதலமைச்சர் ஆக்குவோம்” என்றும், “தேமுதிக இன்றி யாரும் ஆட்சியமைக்க முடியாது” என்றும் அவர் முழங்கியது, இரு பெரும் திராவிடக் கட்சிகளின் தலைமையையும் கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. வாக்கு வங்கி சரிந்து வரும் நிலையில், யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டு தேமுதிக வைக்கும் இத்தகைய நிபந்தனைகள் மற்றும் அதிகாரக் கனவுகள், கூட்டணிக் கதவுகளை மெல்ல மூடி வருவதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.