கிளப்பிவிட்ட உதயநிதி.. எகிறிய சேகர்பாபு.. எண்ட் கார்டு போட்ட அமைச்சர் ரமேஷ்… சட்டமன்றத்தில் நடந்த அந்த விஷயம் என்ன..?

By Soundarya on ஆனி 23, 2026

Spread the love

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, அறநிலையத்துறை பள்ளி, கல்லூரிகளை நடத்தக்கூடாது என்ற பாஜகவின் நிலைப்பாட்டில் தமிழக அரசு உள்ளதா என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோயில் வருமானம் பக்தர்களின் வசதிக்காகவும், கழிப்பறை போன்ற கட்டுமானங்களுக்காகவுமே பயன்படுத்தப்படும் என ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், அடிப்படை கழிவறை வசதி கூட இல்லாத கோயிலுக்கு ரூ.10 கோடியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் எதற்குத் தேவை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த ஆட்சியில் திருமண மண்டபம் போன்ற வணிகப் பயன்பாடுகளுக்காக அறநிலையத் துறை பணம் பயன்படுத்தப்பட்டதாக அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டினார். பழனியில் சித்த மருத்துவமனை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தரத் தயாராக இருந்தும் கடந்த ஆட்சி அதைத் தடுத்ததாகவும், தற்போது அது ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அத்துடன், தாங்கள் யாருக்கும் ‘B டீமாக’ செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

   

இதற்குப் பதிலளித்துப் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சேகர்பாபு, எம்எல்ஏக்களின் பரிந்துரைப்படியே திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், குன்னூரில் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் என்பதால் சுற்றுலாப் பயணிகளுக்காக மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கப்பட்டதாகவும் கூறினார். ஆனால், கோயில் நிலத்தில் கார் பார்க்கிங் அமைக்க பக்தர்கள் கேட்டார்களா என அமைச்சர் ரமேஷ் மீண்டும் கேள்வி எழுப்பினார். இறுதியாக, பெரிய கோயில்களில் மல்டி பார்க்கிங் என்பது அத்தியாவசியமான ஒன்றுதான், அதைத் தேவையில்லை எனக் கூற முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்தார்.