கோவையில் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை ஒரு கும்பல் நள்ளிரவில் தோண்டி எடுத்து, அதனுடன் வைக்கப்பட்டிருந்த மூன்றரை சவரன் தங்க நகையைத் திருடிச் சென்றுள்ள துயரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் கடந்த ஜூன் 6-ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சௌரிபாளையம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, தனது தந்தை ஆசையாக அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்க நகையை, அவரது மகன் வெங்கடேஷ் பாசத்தின் காரணமாக உடலோடு சேர்த்தே புதைத்ததாகக் கூறப்படுகிறது.
இறந்த நாகராஜின் குடும்பத்தினர், அவரது 16-வது நாள் காரியங்கள் முடிந்த பிறகு அந்த இடத்தில் கல்லறை அமைக்கத் திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று 16-வது நாள் காரியத்திற்காக இடத்தை சுத்தம் செய்ய குடும்பத்தினர் மயானத்திற்கு வந்துள்ளனர். அப்போது, நாகராஜின் உடல் புதைக்கப்பட்டிருந்த இடம் தோண்டப்பட்டிருந்ததைக் கண்டு அவர்கள் நிலைகுலைந்து போயினர். இதுகுறித்து அங்கிருந்த கார்த்திக் என்பவரிடம் விசாரித்தபோது, சக்திவேல் என்பவர் சிலருடன் சேர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவோடு இரவாக சடலத்தைத் தோண்டி எடுத்து, அதிலிருந்த தங்க நகையைத் திருடிச் சென்ற அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
நகையைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் சக்திவேல், உயிரிழந்த நாகராஜின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து நாகராஜின் மகன் வெங்கடேஷ் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில், சக்திவேல், மணிகண்டன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய மூவர் மீதும் பீளமேடு காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் கீழ், இறந்த நபரின் சொத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மறுபுறம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் என்பவர் போலீசில் ஒரு புதிய புகாரை அளித்துள்ளார். அதில், காணாமல் போன தங்கச் சங்கிலி குறித்துக் கேட்டுத் தன்னை சிலர் தாக்கியதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அவரது புகாரின் பேரில் மணி, ரஞ்சித் மற்றும் கார்த்தி ஆகிய மூவர் மீதும் போலீசார் தனியாக மற்றொரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர். உயிரிழந்தவரின் உடலுடன் புதைக்கப்பட்ட தங்க நகையைக் கைப்பற்றும் நோக்கில் சடலத்தையே தோண்டி எடுத்த இந்த அநாகரிகமான சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் பலத்த கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
