மகாராஷ்டிர மாநிலம் புல்டாணா மாவட்டம் லோனார் தாலுகாவில் உள்ள தியோல்கான் குண்ட்பால் கிராமத்தில், 19 வயது இளம் பெண் ஒருவர் பாம்புக் கடியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.பார்மசி இரண்டாம் ஆண்டு படித்து வந்த சாக்ஷி என்ற அந்தப் பெண், வெள்ளிக்கிழமை இரவு தனது பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் அவரைப் பாம்பு கடித்துள்ளது.
ஆனால், சாக்ஷிக்கு அது பாம்புக் கடி என்று தெரியாததால் யாரிடமும் சொல்லவில்லை. மறுநாள் காலை எழுந்தபோது அவருக்குத் தொண்டை வலியும், நெஞ்செரிச்சல் போன்ற அசிடிட்டி தொந்தரவும் ஏற்பட்டுள்ளது. சாக்ஷியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, குடும்பத்தினர் அவரை உடனடியாக லோனாரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, எனினும் உடலில் பாம்பின் விஷம் ஏறியதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் மேல் சிகிச்சைக்காக மெஹ்கர் நகருக்குக் கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் பின்னர் அவரது வீட்டின் அருகே ஒரு பாம்பு பிடிபட்ட பின்னரே, சாக்ஷி அசிடிட்டியால் பாதிக்கப்படவில்லை என்பதும், அவர் பாம்புக் கடியால் தான் உயிரிழந்தார் என்பதும் உறுதியானது. இந்தச் சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
