செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள தாமரைக்கேணி கிராமத்தைச் சேர்ந்த விஜய் (30) என்ற கட்டிட தொழிலாளி, அதே ஊரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் கள்ளக்காதல் உறவில் இருந்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் இல்லாத நேரங்களில் விஜய் அடிக்கடி அவர் வீட்டுக்குச் சென்று தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களது இந்தத் தவறான பழக்கம் அந்தப் பெண்ணின் தந்தையான தேவராஜ் (68) என்பவருக்குப் பலத்த ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் விஜய்யை அழைத்து எச்சரித்த போதிலும், விஜய் அதனைப் பொருட்படுத்தாமல் கள்ளக்காதலைத் தொடர்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் இருந்து திடீரென மாயமான விஜய், கிராமத்துத் தோப்பு ஒன்றின் அருகே காலில் வெட்டுக் காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சூனாம்பேடு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் அந்தப் பெண்ணின் தந்தை தேவராஜைப் பிடித்து விசாரித்தபோது, அவரும் அவரது 17 வயது பேரனும் (பிளஸ் 1 முடித்த பள்ளி மாணவர்) இணைந்து விஜய்யைக் கொடூரமாகக் கொலை செய்த திடுக்கிடும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
விஜய் இரவில் கள்ளக்காதலியின் வீட்டை விட்டுத் திரும்பியபோது, தேவராஜும் அவரது பேரனும் பின்தொடர்ந்து சென்று அரிவாளால் விஜய்யின் காலில் வெட்டியுள்ளனர். வெட்டுக் காயத்தால் ரத்தம் வெளியேறி நகர முடியாமல் விஜய் கீழே விழுந்து துடித்தபோது, தாங்கள் மறைத்து வைத்திருந்த விஷத்தை அவரது வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றிக் கொலை செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவத்தில் தேவராஜ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார், அவருடைய 17 வயது பேரன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
