குப்பை மேலாண்மையில் இந்தியா போன்ற நாடுகள் இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வரும் வேளையில், ஸ்வீடன் உலகிற்கே ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது. அங்கு குப்பை என்பது தூக்கி எறியப்படும் கழிவாகப் பார்க்கப்படாமல், ஒரு மதிப்புமிக்க வளமாகக் கருதப்படுகிறது. கழிவுகளைக் குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் முறையான கழிவுப் பிரித்தெடுத்தல் ஆகியவற்றைத் துல்லியமாகப் பின்பற்றுவதே ஸ்வீடனின் இந்த மாபெரும் வெற்றிக்கு முதன்மை காரணமாகும்.
ஸ்வீடனில் மறுசுழற்சி செய்ய முடியாத எஞ்சிய கழிவுகள், நவீன ‘கழிவிலிருந்து ஆற்றல் ஆலைகள் மூலம் அதிக வெப்பநிலையில் எரிக்கப்படுகின்றன. இதிலிருந்து உருவாகும் நீராவி டர்பைன்களை இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. மேலும், இந்த வெப்பத்தைக் கொண்டு தண்ணீர் சூடாக்கப்பட்டு, நிலத்தடிக் குழாய்கள் வழியாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதால், கடுமையான குளிர்காலத்திலும் வீடுகளை கதகதப்பாக வைத்திருக்க முடிகிறது. எரித்த பிறகு கிடைக்கும் சாம்பல் கூட சாலை கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
ஸ்வீடனின் மறுசுழற்சி மற்றும் ஆற்றல் உற்பத்தி முறைமை மிகவும் தீவிரமாகச் செயல்படுவதால், தங்கள் நாட்டின் ஆலைகளைத் தொடர்ந்து இயக்க அங்குள்ள குப்பைகளே போதுமானதாக இல்லை. இதன்காரணமாக, பிற நாடுகளின் குப்பைக் கிடங்கு சுமையைக் குறைக்கும் வகையில், ஸ்வீடன் மற்ற நாடுகளிலிருந்து குப்பைகளை இறக்குமதி செய்கிறது. சில சமயங்களில் கழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஸ்வீடனுக்குப் பணமும் வழங்கப்படுகிறது. சரியான தொழில்நுட்பத்தையும் விழிப்புணர்வையும் பயன்படுத்தினால் குப்பையைக் கூடப் பெரும் வளமாக மாற்ற முடியும் என்பதை ஸ்வீடன் நிரூபித்துள்ளது.
