தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் 85.15% வாக்குகள் பதிவாகி ஜனநாயக கடமை ஆக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள எக்ஸிட் போல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முதல் தேர்தலிலேயே சுமார் 5 தொகுதிகள் வரை வெல்லக்கூடும் என்று ‘ஆக்சிஸ் மை இந்தியா’ உள்ளிட்ட பல்வேறு கணிப்புகள் தெரிவிப்பது அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் தொகுதியைப் பொறுத்தவரை, திமுகவை நேரடியாக விஜய் எதிர்த்தாலும், அங்கு அதிமுக களம் காணாதது தவெகவுக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. பாமக சார்பில் அறிமுகமில்லாத வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பதால், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் விஜய்க்கு சாதகமாகத் திரும்ப வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. பெரம்பூரில் தவெகவினர் மிகத் தீவிரமாகப் பணியாற்றியிருப்பதும், ஆளுங்கட்சியின் ‘வைட்டமின் எம்’ வியூகங்களைக் கடந்து மக்கள் மாற்றத்தை விரும்புவதும் விஜய்க்கு அங்கு வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.
சென்னை தி.நகர் தொகுதியிலும் தவெகவுக்கு சாதகமான அலை வீசுவது கள நிலவரங்கள் மூலம் உறுதியாகிறது. சுமார் 1.32 லட்சம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், அங்கு அதிமுகவை விட தவெக முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவு தவெகவுக்கு இருப்பதால், 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வாக்குகளைப் பெற்றாலே புஸ்ஸி ஆனந்தின் திட்டமிடலால் தவெக எளிதாக வெல்லக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இதேபோல் நெல்லை தொகுதியிலும் வேட்பாளர் ஆர்.எஸ்.முருகன் சமூக வாக்குகள் மற்றும் அதிரடி தேர்தல் செலவுகள் மூலம் திமுக, அதிமுகவினருக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து முன்னிலையில் இருப்பதாகத் தெரிகிறது.
இவை தவிர திருச்சி கிழக்கு தொகுதியில் கடும் போட்டி நிலவினாலும், கடைசி நேரத்தில் கள நிலவரம் விஜய்க்குச் சாதகமாக மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆவடி, அம்பத்தூர், அண்ணா நகர், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட நகர்ப்புற தொகுதிகளிலும் தவெக வலுவான வாக்குகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுக பலவீனமாக இருக்கும் இடங்களில் தவெகவின் ‘விசில்’ சத்தம் ஓங்கி ஒலிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெகவின் இந்த அதிரடி வரவு தமிழகத்தின் இருமுனை அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கமாக அமையுமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.
