அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக விடுத்துள்ள கடும் எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச வணிகத்திற்காக முக்கிய வழித்தடமான ஹார்மஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குள் இதற்கான உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்றும் அவர் கெடு விதித்துள்ளார்.
அவ்வாறு ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், ஈரானின் மின்சாரக் கட்டமைப்புகள், மேம்பாலங்கள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்தி, அந்த நாட்டின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் என ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். “சரியாக 8 மணிக்கு எல்லாவற்றையும் தகர்ப்பதுதான் திட்டம்” என அவர் குறிப்பிட்டுள்ளது போர் மேகங்களைச் சூழச் செய்துள்ளது.
இந்நிலையில் மறுபுறம், அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், அமெரிக்கா வளைகுடாப் பகுதியை ஒரு பேரழிவை நோக்கி இழுத்துச் செல்வதாகவும், இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில் ட்ரம்ப் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ஈரானின் அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது கதிர்வீச்சு கசிவை உண்டாக்கி, அண்டை நாடுகளான குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் போன்ற நாடுகளின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என ஈரான் எச்சரித்துள்ளது. இந்த விவகாரத்தில் அமைதி காக்க ரஷ்யா வலியுறுத்தி வரும் நிலையில், ஹார்மஸ் ஜலசந்தி விவகாரம் உலகப் பொருளாதாரத்திலும் கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
