உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், மனிதநேயத்தின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது. பனியாத்தேர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மகளுக்கும் மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது முஸ்தபா என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்திருந்தார். ஏப்ரல் 26-ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டார் கடைசி நேரத்தில் கூடுதலாக 10 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ளனர். அந்தத் தொகையைத் தர இயலாததால், திருமண ஊர்வலம் வராமல் மணப்பெண் வீட்டார் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர். திருமணத்திற்காகச் செய்யப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உணவுகளும் ஏற்பாடுகளும் வீணாகிப்போயின.
இஸ்லாமிய முறைப்படி திருமணம் (நிக்காஹ்) என்பது வெறும் 30 வினாடிகளில், மிகக் குறைந்த செலவில், இரு தரப்பு சம்மதத்துடன் முடிய வேண்டிய எளிய நிகழ்வு. ஆனால், மார்க்கத்தையும் நம்பிக்கையையும் பற்றிப் பேசும் ஒரு சமூகம், ஆடம்பரத்திற்காகவும் நான்கு பேருக்குக் காட்டிக் கொள்வதற்காகவும் திருமண வாழ்வை இவ்வளவு கடினமாக்கியுள்ளது வேதனைக்குரியது. ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அவரிடமே பணம் கேட்கும் அளவுக்கு இந்தச் சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் வெட்கமற்றவர்களாக மாறி வருவது சமூகச் சீரழிவின் உச்சமாகும். இவர்களுக்கு மார்க்கம் என்பது வெறும் அடையாளமாக மட்டுமே சுருங்கிப் போய்விட்டதோ என்ற கேள்வி எழுகிறது.
*इंतजार करती रही दुलहन, 10 लाख के लिए नहीं आयी बरात!*
इस विडियो में विलाप करते हुए परिवार में कोई इंसान नहीं मरा है, बल्कि ये सभी हमारे समाज और इंसानों के ज़मीर के मरने पर विलाप कर रहे हैं.
विडियो उत्तर प्रदेश के संभल का है. बनियाठेर थाना इलाके के एक गांव में रहने वाले एक… pic.twitter.com/Cvlo5ofFRb
— Khan Afroz خان افروز (@Khanaf00) April 28, 2026
சமூகத்திற்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்: இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் ஆண்களுக்கு யாரும் தங்கள் வீட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்காதீர்கள்; அவர்களை வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரிகளாகவே விட்டுவிடுங்கள். வரதட்சணை என்ற கொடுமை சமூகத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இந்தச் செய்தியைப் பகிர்ந்து, பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாகவும், வரதட்சணைக்கு எதிராகவும் குரல் கொடுப்போம். மனிதநேயம் மரித்துப் போன இத்தகையச் சூழலில், விழிப்புணர்வு ஒன்றே தீர்வு.
