கொடூரன்..! மனைவியைக் கொன்று வரதட்சணை பெட்டிக்குள்ளேயே அடைத்த கணவன்… சிக்கிய முக்கிய ஆதாரம்… 3 திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுநரின் வெறிச்செயல்…!!

By Soundarya on மாசி 14, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நிஷாத்புரா பகுதியில், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஒரு காலி மனையில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் (செப்டிக் டேங்க்) இரும்புப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான அஷ்ரஃபி என்கிற சியா என்பது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநரான சமீர் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, சியா அவரைத் திருமணம் செய்துகொண்டு போபாலுக்கு வந்துள்ளார். ஏற்கனவே இருமுறை திருமணமான சமீர், சியாவை தனது மைத்துனி (சாலி) என்று அக்கம் பக்கத்தினரிடம் அறிமுகப்படுத்தி ஒரே வீட்டில் தங்க வைத்துள்ளார்.

சமீரின் இரண்டாவது மனைவிக்கும் சியாவுக்கும் இடையே ஏற்பட்ட தொடர் தகராறு காரணமாக, இரண்டாவது மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த இடைவெளியில் சமீருக்கும் சியாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த சமீர் பிப்ரவரி 9-ம் தேதி சியாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். ஆதாரத்தை மறைக்க, தனது இரண்டாவது திருமணத்தில் வரதட்சணையாகக் கிடைத்த அதே இரும்புப் பெட்டிக்குள் சியாவின் உடலை அடைத்து, அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளார். சியாவின் கையில் இருந்த ‘தீப்’ என்ற டாட்டூவை வைத்து போலீஸார் அடையாளத்தைக் கண்டுபிடித்தனர். தற்போது தலைமறைவாக உள்ள சமீரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.