தமிழக அரசியல் களத்தில் தேர்தல் கூட்டணி குறித்த பரபரப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வரும் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், பாஜக தலைமைக்கும் இடையே புதிய சவால்கள் எழுந்துள்ளன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், ராமதாஸையும் முழுமையாக உள்ளே கொண்டு வந்தால் மட்டுமே அக்கட்சியின் முழு வாக்கு வங்கியும் கிடைக்கும் என்று பாஜக கருதுகிறது. இதற்காக ராமதாஸை சமாதானப்படுத்தி அழைத்து வரும் பொறுப்பை டெல்லி தலைமை இபிஎஸிடம் ஒப்படைத்துள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் ராமதாஸ் மிகவும் கறாரான நிபந்தனைகளை விதித்து வருகிறார். அன்புமணிக்கு இணையான முக்கியத்துவமும், கூடுதல் தொகுதிகளும் வழங்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இல்லையெனில் தாமே பாமகவின் உண்மையான முகம் என்பதை நிலைநாட்டும் வகையில் தனித்து செயல்படவும் அவர் தயங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இபிஎஸிடம் இது குறித்து தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், திமுக தரப்பும் ராமதாஸைத் தங்கள் பக்கம் இழுக்க ரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. ஆனால், அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) இதற்கு கடும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. பாமகவுடன் கூட்டணி வைத்தால் தங்களது தொண்டர்கள் அதிருப்தி அடைவார்கள் என்றும், அது விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் நோக்கி அவர்கள் நகரக் காரணமாகிவிடும் என்றும் விசிக அச்சப்படுகிறது. திருமாவளவன் சமீபகாலமாக ராமதாஸுக்கு ஆதரவாகப் பேசி வந்தாலும், தேர்தல் கூட்டணி என்று வரும்போது விசிக நிர்வாகிகள் மிகவும் எச்சரிக்கையாகவே காய்களை நகர்த்துகின்றனர்.
தற்போது பாமகவின் சின்னம் மற்றும் கட்சி அங்கீகாரம் அன்புமணி வசம் இருந்தாலும், கட்சியின் அடித்தட்டுத் தொண்டர்கள் ராமதாஸின் முடிவையே உற்று நோக்குகின்றனர். ராமதாஸ் திமுக கூட்டணிக்குச் சென்றால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இதனால், தனது அரசியல் செல்வாக்கைத் தக்கவைக்க ராமதாஸ் எடுக்கப்போகும் இறுதி முடிவு என்ன என்பதுதான் தற்போதைய தமிழக அரசியலின் மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது. இபிஎஸ் கொடுத்த வாக்குறுதி நிறைவேறுமா அல்லது ராமதாஸ் புதிய ரூட் எடுப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.
