கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு தாலுகா பாங்கஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான கோபி கவுரம்மா என்ற ஆதிவாசி பெண், நரசிம்மா என்பவரின் விவசாய நிலத்தில் பல ஆண்டுகளாக தினக்கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கௌரி-கணேசா பண்டிகையின் போது இவர் வேலைக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நில உரிமையாளர் நரசிம்மா மற்றும் சங்கரா ஆகிய இருவரும் சேர்ந்து கவுரம்மாவை கொடூரமாகத் தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்தார்.
தாக்கப்பட்ட கவுரம்மா சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லாததால், கடுமையான வலியால் அவதியுற்ற அவர் மருத்துவமனைக்கு வெளியே உள்ள நடைபாதையிலேயே மயங்கி விழுந்து கிடந்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு, அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்ட அவர் எச்.டி. கோட்டே அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
https://twitter.com/HateDetectors/status/2099836319321227537/video/1
இச்சம்பவம் குறித்து ஹுல்லஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இக்கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
