திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள சேத்பட் பகுதியில், இயற்கை உபாதை கழிக்கச் சென்ற கர்ப்பிணிப் பெண் ஒருவரிடம் யோகேஸ்வரன் என்ற இளைஞர் ஆபாசமாகப் பேசி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்தப் பகுதியில் தனியாகச் செல்லும் பெண்களிடம் இரட்டை அர்த்தங்களில் பேசுவதையும், ஆடைகளைக் கழற்றி அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்த அவரிடமிருந்து தப்பிக்க, பாதிக்கப்பட்ட பெண் கற்களால் தாக்கிவிட்டுத் தன் கணவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவரும் அப்பகுதி மக்களும் அந்த இளைஞரைப் பிடித்துத் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடந்த ஓராண்டாகவே இப்பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த அந்த இளைஞரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட யோகேஸ்வரன், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலை அக்கட்சியின் நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். எனினும், இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்கு மத்தியில், ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
