விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த மருதாயி என்பவரது வீட்டில், கடந்த மே மாதம் தங்க முனீஸ்வரன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் புகுந்து கொள்ளையடித்தது. அங்கிருந்தவர்களைத் தாக்கி நகை, பணம் மற்றும் செல்போன்களைப் பறித்துச் சென்ற இந்த கும்பலை, மருதாயி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிகழ்வே தற்போது நடந்துள்ள கொலைச் சம்பவத்திற்கு அடிப்படைச் காரணமாக அமைந்துள்ளது.
இந்த திருட்டு வழக்கில் கைதாகி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த தங்க முனீஸ்வரன், தன்னை சிறைக்கு அனுப்பிய ஆத்திரத்தில் தினமும் மருதாயியின் வீட்டிற்குச் சென்று தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கடுமையான கோபமடைந்த மருதாயி, அவரைத் திட்டமிட்டு தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அவர் வீட்டு வாசலுக்கு வந்தவுடன், எதிர்பாராத விதமாக அவரது கண்களில் மிளகாய் பொடியைத் தூவிய மருதாயி, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த முனீஸ்வரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொடூர கொலை தொடர்பாக மருதாயி, அவரது 16 வயது மகன் மற்றும் மதுரை வில்லூரைச் சேர்ந்த உறவினர் ஒருவரைப் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த தங்க முனீஸ்வரன் கூலி வேலை செய்து வந்தவர் என்றும், அவர் மீது ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் பல்வேறு வழிப்பறி வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
