கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரத்தைச் சேர்ந்த பிளம்பரான பாலகிருஷ்ணனுக்கும், அவரது அண்ணன் குடும்பத்திற்கும் இடையே நீண்ட காலமாக சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பாலகிருஷ்ணனை வழிமறித்து அவரது அண்ணி பொன்னம்மாள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற பொன்னம்மாள், அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து கொழுந்தன் என்றும் பாராமல் பாலகிருஷ்ணனின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பாலகிருஷ்ணன், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக பாலகிருஷ்ணனின் மகன் மனோஜ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திருந்த ஆரல்வாய்மொழி போலீசார், இந்த உயிரிழப்பைத் தொடர்ந்து அதனை கொலை வழக்காக மாற்றியுள்ளனர். கொலையை அரங்கேற்றிவிட்டு தலைமறைவாகியுள்ள பொன்னம்மாளைக் கைது செய்ய தற்போது இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சொத்துக்காக அண்ணியே கொழுந்தனை நடுத்தெருவில் அடித்துக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
