தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் கட்சி தொடங்கிய போதிலும் எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜயகாந்த், கமலஹாசன் உள்ளிட்டோரால் உடனடியாக ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போன வரலாறுகள் உண்டு. இந்நிலையில், கட்சி தொடங்கி தனது முதல் தேர்தலிலேயே ஆட்சியைக் கைப்பற்றித் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜயும் பதவியேற்றுள்ளார். சமீபத்தில் தனது பிறந்தநாள் விழாவில் நடிகர் தனுஷ் பேசிய பேச்சு, அவரும் விரைவில் அரசியல் கட்சி தொடங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரதன் பண்டிட் வெற்றிவேலிடம் தனுஷின் அரசியல் வருகை குறித்துக் கேட்டபோது, தனுஷ் அரசியலில் இறங்கினால் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளைத் தாண்டி இரண்டாமிடத்திற்கு வந்துவிடுவார் எனக் கூறியுள்ளார். தனுஷின் ஜாதகத்தை நேரடியாகப் பார்த்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், அரசியலுக்கு அனுபவத்தை விட உதவி செய்யும் நல்மனமே போதும் என்றும், ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் 2031-ல் இது ‘விஜய் vs தனுஷ்’ என்ற போட்டியாக மாறும் என்றும் கணித்துள்ளார்.
மறுபுறம், தனுஷ் அறிமுகப்படுத்திய ரசிகர் மன்றக் கொடி அவரது சாதி அடையாளத்தைக் குறிப்பதாகச் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் எழத் தொடங்கியுள்ளன. மேலும், தமிழ்நாட்டின் அதிகாரத்தில் பிற மொழியினர் ஆதிக்கம் செலுத்துவதாகச் சில அமைப்புகள் வேதனை தெரிவித்து வரும் சூழலில், தனுஷ் தெலுங்கு மொழியைப் பேசுபவர் என்று கூறி அவரது அரசியல் வருகைக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இருப்பினும், அவர் தெலுங்கராக இருந்தாலும் தங்களது முழு ஆதரவு தனுஷுக்கே என அவரது ரசிகர்கள் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.
