“எனக்குப் பின்னரும் நூறு ஆண்டுகள் அதிமுக வலிமையாக இருக்கும்” என்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கூற்றிற்கு முற்றிலும் மாறாக, இன்று அதிமுக என்னும் மாபெரும் இயக்கம் கடற்கரை மணல் வீடு போல கரையத் தொடங்கியுள்ளது. கட்சியின் முக்கிய தளகர்த்தர்களும் நிர்வாகிகளும் ஒவ்வொருவராக வெளியேறி வரும் நிலையில், கப்பலை வழிநடத்த வேண்டிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதைப் பற்றியும் கவலைப்படாமல் ‘ஜென்’ மனநிலையில் இருப்பது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. கட்சியை விட்டுப் போவோர் போகட்டும் என்ற அவரது அலட்சியப் போக்கும், வெளியேறுபவர்களை சமூக வலைதளங்களில் வசைபாட ஒரு புதிய குழுவை அமைத்திருப்பதுமே விசுவாசிகளின் மனக்குமுறலுக்கு முக்கியக் காரணமாக மாறியுள்ளது.
எத்தனை தோல்விகள் வந்தாலும் பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்து, நெருப்பாற்றில் நீந்தி கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்த ஜெயலலிதாவின் ஆளுமையோடு ஒப்பிடுகையில், எடப்பாடி பழனிசாமியிடம் கட்சியைப் புத்துயிரூட்டும் எண்ணமோ, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வைராக்கியமோ துளியும் இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் சாடுகின்றனர். மூத்த நிர்வாகிகள் சிலர் இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, “வைகோ கட்சி நடத்தவில்லையா? மதிமுக போல கட்சியை நடத்திவிட்டுப் போகிறேன்” என்று அவர் கூறியதாக வெளிவரும் தகவல்கள், அதிமுக விசுவாசிகளை மேலும் நிலைகுலையச் செய்துள்ளது. ஆலமரம் போல அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஒரு பேரியக்கத்தை, ஒரு பிராந்தியக் கட்சி போல நடத்தத் துணிவதுதான் எடப்பாடியின் தில்லு என்று அவரது ஆதரவாளர்கள் வக்காலத்து வாங்குவது வேடிக்கையாக உள்ளது.
காலங்காலமாகத் தீவிர திமுக எதிர்ப்பில் வளர்ந்து, தமிழக ஆட்சிக்கட்டிலில் பலமுறை அமர்ந்த ஒரு பேரியக்கம், இன்று அரச மர இலை போல உதிர்ந்து சருகாவதை எண்ணிக் களத்தில் உழைக்கும் ‘ரத்தத்தின் ரத்தங்கள்’ கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ கட்சியைப் பற்றிப் கவலைப்படாமல், தன் பொதுச்செயலாளர் என்ற பதவியையும் இருக்கும் இடத்தையும் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதிலேயே குறிக்கோளாக இருக்கிறார். இனியாவது யாராவது அவரது காதில் உண்மையை உரக்கச் சொல்லி அவரை மிக்சர் சாப்பிடும் நிலையிலிருந்து மாற்றாவிட்டால், மிச்சமிருக்கும் அதிமுகவும் அடியோடு காலியாகிவிடும் என்பதே தொண்டர்களின் தற்போதைய ஒட்டுமொத்த கவலையாக உள்ளது.
