அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, தனது வீட்டில் பணி புரியும் கார் டிரைவர் புவனேஸ்வரன், சமையல், வீட்டு வேலை, தோட்டவேலை, பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பாக்யா, கிருஷ்ணாவேணி, பிரபாவதி என 4 பேருக்கும் தனித்தனியாக வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறார். தலா 3 சென்ட் பரப்பளவில், 1000 சதுர அடியில், 2 படுக்கை அறை கொண்ட வீடுகளை ரூ. 80 லட்சம் மதிப்பில், தனது சொந்த செலவில் கட்டித் தந்திருக்கிறார்.
இவர் துணைவேந்தராக பணி புரிவதற்கு முன், பெங்களூரில் தங்கி வேலை செய்துள்ளார். அப்பொழுது தன் வீட்டில் வேலை செய்த 2 பேருக்கு வீடுகளை கட்டிக் கொடுத்து, அவர்களின் மருத்துவ செலவு, குடும்ப செலவு, மேலும் அவர் குழந்தைகளின் கல்விச் செலவு என அனைத்திற்கும் உதவிக்கரம் நீட்டி உள்ளார்.
மேலும் தற்பொழுது கோவையில் தனது வீட்டில் பணிபுரியும் 4 பேருக்கு தனி வீடு கட்டிக் கொடுத்திருப்பதை பற்றி அவரிடம் கேட்ட பொழுது, “இப்ப இருக்கிற சூழ்நிலையில, சம்பளம் வாங்கி காசு சேர்த்து வீடு கட்ட முடியுமா? அவங்க வாங்குற சம்பளம் குடும்பம் நடத்தவே போதுமானது. இப்போதைக்கு என் வீட்டு வளாகத்திலேயே அவர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அவர்கள் வேலையை விட்டு ஓய்வு பெற்ற பிறகு, என்ன செய்வார்கள்? நாம மட்டும் சொகுசா இருந்தா போதாது, நம்மளை நன்றாக பார்த்துக் கொள்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமா? அவர்களும் நம் குடும்பத்தில் அங்கம் தானே! முடிஞ்ச வரைக்கும் உதவி செய்வேன்!” என்று பாலகுருசாமி கூறினார்.
மேலும் ஒருவருக்கு ரூ. 80 லட்சம் அன்பளிப்பு என்பது பெரிய தொகை அல்லவா? என்று கேள்வி எழுப்பியதற்கு, “அவங்களும் நல்லா இருக்கணும். அவங்களால இந்த காசு சேர்க்க முடியுமா? குழந்தைகளோடு சின்ன வாடகை வீட்டில் கஷ்டப்பட வேண்டாம்னு தான், கொஞ்சம் பெரிய வீடு கட்டிக் கொடுத்தோம். எல்லோரும் சந்தோஷமாக இருப்போம்!” என்றார். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகரம். எல்லோருக்கும் பணம் கிடைப்பதில்லை, அப்படி கிடைத்தால் பிறருக்கு உதவ அனைவருக்கும் மனம் வரதில்லை.
