தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்ற முடிவில் உறுதியாக இருக்கும் நிலையில், ஆரம்பத்தில் ஆர்வம் காட்டிய நிர்வாகிகள் தற்போது சற்றுத் தயக்கம் காட்டி வருவதாகப் பனையூர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 234 தொகுதிகளுக்கும் வலுவான வேட்பாளர்கள் இருக்கிறார்களா என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், தவெக தலைமை ஒரு ரகசியத் திட்டத்தைச் செயல்படுத்தியது. இதன்படி, திமுக மற்றும் அதிமுகவில் சீட் கிடைக்காத முக்கியப் புள்ளிகள் மற்றும் தேர்தல் செலவுகளைத் தாங்கக்கூடிய வசதியான நபர்களை மாவட்டச் செயலாளர்கள் மூலம் கண்டறிந்து, ஒரு உத்தேசப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ள நபர்களிடம், தேர்தலுக்கான ஆரம்பகட்ட ஆயத்தமாக தலா ஒரு கோடி ரூபாயைத் தயாராக வைத்திருக்கத் தலைமை அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலானவர்கள் பணத்தைத் திரட்டிவிட்டுத் தலைமைக்குத் தகவல் தெரிவித்த நிலையில், தற்போது நிலவும் அரசியல் சூழல் அவர்களை யோசிக்க வைத்துள்ளது. “கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கும்?” என்ற தயக்கம் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விஜய்யின் அரசியல் நகர்வுகளைப் பொறுத்தவரை, கடைசி நேரத்தில் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் (NDA) கைக்கோர்த்தால் வெற்றி உறுதி என நம்பும் நிர்வாகிகள், தனித்துப் போட்டி என்ற முடிவால் தற்போது பின்வாங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது.
இன்னொரு புறம், வேட்பாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கவும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கவும் தவெக தலைமை ஒரு மாற்றுத் திட்டத்தை ஆலோசித்து வருகிறது. விருப்ப மனுக்களை நேரடியாகப் பெறுவதற்குப் பதிலாக, ஆன்லைன் வாயிலாகப் பெற விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் தகுதியான மற்றும் மக்கள் செல்வாக்குள்ள புதிய முகங்களை அடையாளம் காண முடியும் எனப் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில், இந்த வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணி குறித்த யூகங்களுக்கு விஜய் முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
