கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் மயக்கமடைந்த நிலையில், அவனது பெற்றோர் முதலில் அது உணவு ஒவ்வாமை (Food Poisoning) காரணமாக இருக்கலாம் என்றே கருதினர். இருப்பினும், சிறுவனின் உடலில் பாம்பு கடித்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குழந்தைகளின் அறையைச் சோதித்தனர். அப்போது படுக்கையில் இருந்த தலையணைக்கு அடியில் ஒரு பாம்பு சுருண்டு கிடப்பதைக் கண்டெடுத்தனர்.
உடனடியாக அந்தப் பாம்பை அடித்துக் கொன்ற குடும்பத்தினர், உயிரிழந்த சிறுவனின் சகோதரன் அனோத்துக்கும் பாம்பு கடித்திருக்கலாம் என்ற அச்சத்தில் அவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அனோத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்த சிறுவன் அல்ஜோவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குழந்தைகளின் படுக்கைக்கு அடியில் பாம்பு எவ்வாறு நுழைந்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களுக்கு நேர்ந்த இந்த விபரீதம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
