ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தவறாக மொழிபெயர்த்தது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் கேலிக்குள்ளாகி வருகிறது. ராகுல் காந்தி பாஜக மற்றும் பிரதமர் மோடி குறித்து முன்வைத்த காரசாரமான விமர்சனங்களை, செல்வப்பெருந்தகை அதற்குச் சம்பந்தமே இல்லாத முற்றிலும் மாறுபட்ட வரிகளில் மொழிபெயர்த்துள்ளார். குறிப்பாக, மோடியின் முகத்தில் நம்பிக்கை இல்லை என ராகுல் கூற, அவர் நம்பிக்கையுடன் இருப்பதாகச் செல்வப்பெருந்தகை மாற்றிச் சொன்னது அங்கிருந்தவர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அதானி விவகாரம் குறித்து ராகுல் காந்தி ஆங்கிலத்தில் அடுக்கிய பல குற்றச்சாட்டுகளை, செல்வப்பெருந்தகை முற்றிலும் வேறொரு பொருளில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ராகுல் காந்தி ஒரு கருத்தைச் சொல்ல, செல்வப்பெருந்தகை தன் இஷ்டத்திற்குப் பேசிய வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. ஏற்கனவே இதுபோன்று ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்க்கும்போது பல சொதப்பல்கள் நடந்த நிலையில், தற்போது செல்வப்பெருந்தகையின் இந்த குளறுபடியை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வறுத்து எடுத்து வருகின்றனர்.
