பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை தாமரை செல்வி, அண்மைக்காலமாகத் தன்னைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். ‘சின்ன மருமகள்’ சீரியலில் நடித்து வந்தபோது, அதில் கதாநாயகியாக நடித்த ஸ்வேதாவின் கணவர் ஆதி என்பவர், தன்னிடம் நகை மற்றும் பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டதாகத் தாமரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தாமரையைத் தொடர்ந்து நடிகை வைஷ்ணவி மற்றும் டிடிஎஃப் வாசன் ஆகியோரையும் ஆதி இதேபோல் ஏமாற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன், தாமரைக்கும் ஆதிக்கும் இடையே தவறான பழக்கம் இருப்பதாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். பண மோசடிப் புகாரை தனிப்பட்ட ஒழுக்கம் சார்ந்த விஷயமாகத் திசை திருப்பிய பயில்வானின் இந்த பேச்சுக்குத் தாமரை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புதிய காணொளியில், ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்புவதற்குத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
தனது ஆவேசத்தைப் பகிர்ந்துள்ள தாமரை, “நான் ஒரு பக்கா கிராமத்துக்காரி, யாரிடமும் அசிங்கமான முறையில் பழக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று கூறியுள்ளார். மேலும், தன்னைப்பற்றித் தவறாகப் பேசிய பயில்வான் ரங்கநாதனை நேரில் கண்டால் “செருப்பால் அடிப்பேன்” என்று மிகக் காட்டமாகத் தனது பதிலடியைக் கொடுத்துள்ளார். ஒரு பெண்ணின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துபவர்களுக்கு இது ஒரு சரியான பாடம் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
