விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். என்டிஏ (NDA) என்பது எந்த வளர்ச்சியும் இல்லாத கூட்டணி என்றும், தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கும் அக்கூட்டணியின் பொய்களுக்குப் புள்ளிவிவரங்களுடன் பதிலளிக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, தனது மரணம் குறித்து இழிவாகப் பேசிய பழனிசாமிக்கு, “மரணத்தைப் பார்த்து கலங்கக்கூடியவன் நான் அல்ல” என முதலமைச்சர் காட்டமாகத் தெரிவித்தார்.
தனது அரசியல் பின்னணி மற்றும் துணிச்சலை நினைவுகூர்ந்த ஸ்டாலின், 1976-ம் ஆண்டிலேயே அதாவது எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு வருவதற்கு முன்பே, மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறைக் கொடுமைகளை அனுபவித்தவன் என்று குறிப்பிட்டார். மேலும், கொரோனா காலத்தில் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து நேரடியாக வார்டுகளுக்கே சென்று மக்களைச் சந்தித்ததைச் சுட்டிக்காட்டினார். அதிகாரிகளிடமோ, குடும்பத்தினரிடமோ சொல்லாமல் உயிரைப் பணையம் வைத்துச் சென்றதால், தனது மனைவி துர்கா ஒரு வாரம் தன்னிடம் பேசாமல் கோபித்துக் கொண்டதாக உருக்கமாகக் குறிப்பிட்டார்.
தலைவர்களின் கண்ணியம் குறித்துப் பேசிய அவர், பெரியார், அண்ணா, காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர் போன்ற பண்பாடுமிக்கப் பெருந்தலைவர்களுடன் பழகிய நீண்ட அரசியல் அனுபவம் தனக்கு இருப்பதாகத் தெரிவித்தார். அத்தகைய கண்ணியமான அரசியல் சூழலில் வளர்ந்த தான், இன்று தரம் தாழ்ந்து பேசுபவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருப்பது உண்மையிலேயே வருத்தமளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
