தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர்களில் உச்சபட்ச புகழைப் பெற்றவர் என்றால் அது கண்ணதாசன் அவர்கள்தான். 50 களில் முதலில் படங்களுக்கு கதை வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்ணதாசன் 50 களின் இறுதியில் படங்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரின் பாடல்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் அவர் பாடல் எழுதுவதில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினார்.
தமிழ் சினிமாவின் பாடல் ஆசிரியர்களில் கண்ணதாசன் அளவுக்கு புகழ்பெற்றவர்கள் யாரும் இல்லை. அவர் இறந்து 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றளவும் அவர் பாடல்கள் கொண்டாடப்பட்டு, அவர் நினைவு கூறப்படுகிறார்.
கண்ணதாசனின் பாடல்கள் உச்சத்தைத் தொட்டாலும் அவரை உட்கார வைத்துப் பாடல்கள் எழுதி வாங்குவதும் கடினமான ஒன்று. அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சொன்ன நேரத்தில் அவர் பாடல்கள் எழுத வரமாட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் வந்துவிட்டால் பாடல்கள் எழுதிக் கொடுத்துவிட்டுதான் போவார்.
கண்ணதாசன் சினிமாவில் தீவிரமாக இயங்கிய போதே அரசியலிலும் அவர் செயல்பட்டு வந்தார். முதலில் திமுகவில் இருந்த கண்ணதாசன், அங்கு அண்ணாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸுக்கு சென்றார். பின்னர் காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த போது இந்திரா காங்கிரஸில் இணைந்தார். பின்னர் எம் ஜி ஆர் ஆட்சிக்கு வந்த போது அவர் அரசவையில் கவிஞராக செயல்பட்டார். அரசியல் வாழ்க்கை அவருக்கு நேர்ம்றையாக அமையவில்லை என்றாலும், அதனால் எப்போதும் அவரின் பாடல் ஆசிரியர் வாழ்க்கைக்கு பங்கம் வந்ததில்லை.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், கண்ணதாசன் அவர்களிடம் உதவியாளராகப் பணியாற்றியவருமான பஞ்சு அருணாசலம் கவிஞர் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை சொல்லியுள்ளார். அதில் “சில தெலுங்கு தயாரிப்பாளர்கள் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் படம் எடுப்பார்கள். முதலில் எல்லாம் தெலுங்கில் எழுதப்படும் பாடல்களை அப்படியே தமிழில் மாற்றித் தர சொல்வார்கள். ஆனால் கண்ணதாசன் புகழ் உச்சத்தைத் தொட்டபிறகு அது அப்படியே மாறியது. கண்ணதாசன் எழுதும் பாடல்களை அவர்கள் அப்படியே தெலுங்கில் மாற்றிக்கொண்டார்கள். அந்த அளவுக்குக் கவிஞரின் புகழ் இருந்தது” எனக் கூறியுள்ளார்.