200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இதனால் தான் உட்படப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சின்னத்திரை நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு திமுக அரசிலும் தொடரப்பட்ட 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம், தவெக ஆட்சியில் 500 யூனிட்டிற்குள் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட்டாக உயர்த்தப்பட்டது. இருப்பினும், சமீபகாலமாகக் கணக்கீட்டுக் குளறுபடிகளால் மின்கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்து வந்த நிலையில், வைஷாலியின் இந்த வீடியோ விவகாரத்தை மேலும் சூடேற்றியது.
நடிகை வைஷாலியின் புகாருக்குத் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் உடனடியாக விளக்கம் அளித்துள்ளது. அந்தப் பதிவில், “புகார் குறித்து விசாரிப்பதற்காக மின்வாரியக் குழுவினர் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் மற்றும் முகவரியைக் கேட்டனர். ஆனால், தகவல்களைத் தருவதாகக் கூறி அழைப்பைத் துண்டித்த அவர், அதன் பிறகு மின்வாரியம் செய்த பல முயற்சிகளையும் ஏற்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நுகர்வோர் சரியான விவரங்களை வழங்கினால் நேரில் சென்று ஆய்வு செய்து உரியத் தீர்வு காண மின்வாரியப் பொறியாளர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்த விவகாரம் குறித்துத் தமிழ்நாடு அரசு உண்மைச் சரிபார்ப்புக் குழு (TN IID) விரிவான விளக்கமளித்துள்ளது. 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் மூலம் 1 கோடியே 42 லட்சம் நுகர்வோர்கள் பலனடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அக்குழு, கடந்த ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் நுகர்வோரும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் நுகர்வோரும் முற்றிலும் கட்டணமின்றி இலவச மின் சேவையைப் பெற்றுள்ளதை எண்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய சூழலில் மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள மின்சார வாரியமும் அரசும், உண்மை நிலவரத்தை முழுமையாக அறியாமல் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளையும் தவறானத் தகவல்களையும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளன.
