கும்பகோணம் மூப்பக்கோவிலைச் சேர்ந்த தப்பாட்டக் கலைஞர் பாலாஜி (25), அசூரைச் சேர்ந்த அபிஷேக் (19) மற்றும் பிரவீன் (19) ஆகியோர் நண்பர்கள். அபிஷேக், ஒரு 17 வயது நர்சிங் மாணவியைக் காதலித்த நிலையில், கடந்த நவம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்வதற்காக அவளை அழைத்துச் சென்றுள்ளார். காதலிக்குத் தன் வீட்டில் அடைக்கலம் அளித்த பாலாஜியிடமே, அபிஷேக் தனது செல்போனைப் பாதுகாப்பிற்காகக் கொடுத்து வைத்திருந்தார்.
இதற்கிடையில், மாணவியின் பெற்றோர் பாலாஜியின் வீட்டிலிருந்து தங்கள் மகளை மீட்டுச் சென்றனர். இந்நிலையில், நேற்று இரவு நண்பர்கள் மூவரும் அசூர் அருகே உள்ள வாய்க்கால் பகுதியில் மது அருந்தச் சென்றனர். அப்போது, பாலாஜிதான் மாணவியின் பெற்றோரிடம் தகவலைக் கசியவிட்டார் என்று அபிஷேக் குற்றம் சாட்டினார். மேலும், அபிஷேக் தனது செல்போனைத் திருப்பிக் கேட்டபோது, பாலாஜி கொடுக்க மறுத்ததால் அவர்களுக்குள் சண்டை மூண்டது.
வாக்குவாதம் முற்றி, பாலாஜி கத்தியால் அபிஷேக்கைக் குத்த முயன்றபோது, அபிஷேக்கும் பிரவீனும் அந்தக் கத்தியைப் பறித்தனர். பின்னர், இருவரும் சேர்ந்து கட்டைகள், மதுபாட்டில்கள் மற்றும் கத்தியால் பாலாஜியைத் தாக்கியதோடு, அவரை வாய்க்காலில் தள்ளி சேற்றில் அமுக்கிக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றனர். வீட்டிற்கு வராத கணவரைத் தேடி பாலாஜியின் மனைவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலாஜி கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு, அபிஷேக் மற்றும் பிரவீன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
