பீகார் மாநிலம் சுபால் மாவட்டம் திரிவேணிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த சசிதா தேவி என்ற பெண், நவராத்திரி வழிபாட்டின் போது பாடி துர்கா தேவி கோவில் வளாகத்தில் தனது மார்பின் மீது புனித கலசத்தை வைத்தவாறு ஒன்பது நாட்கள் தொடர்ந்து படுத்திருந்தார். இந்த வழிபாட்டின்போது அவர் உணவும் தண்ணீரும் ஏதுமின்றி மிகவும் கடினமான முறையில் விரதம் மேற்கொண்டுள்ளார்.
பண்டிகை சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்த பின் அவர் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். ஆனால், நீண்ட நாட்கள் பட்டினியால் சோர்வடைந்திருந்த அவரது உடல்நிலை திடீரென மோசமடையத் தொடங்கியது. மறுநாள் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள திரிவேணிகஞ்ச் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். தொடர்ந்து ஒன்பது நாட்கள் நீரும் உணவும் உட்கொள்ளாததால் ஏற்பட்ட கடுமையான நீர்ச்சத்து குறைபாடு மற்றும் அதனைத் தொடர்ந்த மாரடைப்பே இந்த மரணத்திற்கு முதன்மைக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கணித்துள்ளனர். பக்தியுடன் விரதத்தை நிறைவு செய்த மறுநாளே பெண் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
