தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது பெண் அர்ச்சனா, தனது முதல் கணவருடனான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சூழலில் வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையில், அதே நிறுவனத்தில் பணிபுரியும் உத்தரகாண்ட்டைச் சேர்ந்த விமல் என்ற இளைஞருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தன்னை முறைப்படி திருமணம் செய்துகொள்ளுமாறு அர்ச்சனா தொடர்ந்து வலியுறுத்திய போதிலும், விமல் அதற்கு உடன்படாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்துள்ளது.
இச்சூழலில், அதிகாலை நேரத்தில் விமலுக்கு காணொளி அழைப்பு விடுத்த அர்ச்சனா, தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த விமல் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து கதவை உடைத்துச் சென்ற போலீசார், அர்ச்சனா தூக்கில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, விமலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
