ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த முதியவர் டாடாஜி (50) என்பவர் நேற்று அப்பகுதியில் உள்ள மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மதுபோதையில் வந்த 17 வயது சிறுவன் ஒருவன் மது வாங்க 10 ரூபாய் தருமாறு அந்த முதியவரிடம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் சிறுவன் கேட்ட பத்து ரூபாயை கொடுக்க டாடாஜி மறுப்பு தெரிவித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் போதையில் இருந்த சிறுவன் தான் வைத்திருந்த கத்தியால் முதியவரை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் படுகாயம் அடைந்த டாடாஜி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடனே தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிறுவனை தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
