இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் மாவட்ட பகிஷா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக குல்தீபன் டாப்னோ என்பவர் பணியாற்றி வருகின்றார். இதனிடையே அந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு தலைமையாசிரியர் குல்திபன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவிக்கு அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் தலைமை ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தற்கொலைக்கு தலைமை ஆசிரியர்தான் காரணம் என்று சிறுமி எழுதி வைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
