“பதில் சொல்லலனா கொன்னுடுவேன்!”… 3 ஆம் வகுப்புச் சிறுமிக்குக் குச்சியால் கொடூரத் தண்டனை கொடுத்த ஆசிரியர்… உ.பி-யை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!!

By Muthu Mani on சித்திரை 20, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரோலி காலா கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரிடம் ஆசிரியர் அப்துல் வாஹித் கேள்வி கேட்டபோது, அவரால் பதிலளிக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், ஒரு தடியைக் கொண்டு அந்த சிறுமியை முதுகில் ரத்தம் வரும் அளவிற்கு கொடூரமாகத் தாக்கியுள்ளார். அத்தோடு நிறுத்தாமல், இந்தத் தாக்குதல் பற்றி யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் அந்தச் சிறுமியை மிரட்டி பீதியில் ஆழ்த்தியுள்ளார்.

வீட்டிற்கு வந்த சிறுமியின் ஆடைகளை அவரது தாய் மாற்ற முற்பட்டபோது, முதுகில் இருந்த கொடூரமான காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறுமி அழுதுகொண்டே நடந்தவற்றைக் கூற, ஆத்திரமடைந்த தாய் கிராம மக்களுடன் பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் நியாயம் கேட்டுள்ளார். ஆனால், ஆசிரியர் அப்துல் வாஹித் வருத்தம் தெரிவிக்காமல், சிறுமியின் தாயிடம் வாக்குவாதம் செய்து வெளியேறுமாறு கூறியுள்ளார். மேலும், அரசு வழங்கும் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களை அந்த ஆசிரியர் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாகவும் தாய் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

   

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கரீமுதீன்பூர் போலீசார் ஆசிரியர் அப்துல் வாஹித் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேள்விக்குப் பதிலளிக்கவில்லை என்பதற்காக ஒரு பச்சிளம் குழந்தையை மிருகத்தனமாகத் தாக்கி, மரண மிரட்டல் விடுத்த ஆசிரியரின் செயல் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், அந்த ஆசிரியர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்