தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், மதுரையின் பல்வேறு தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கும் பணி ரகசியமாகத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மதுரை வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வாக்குக்கு ஆயிரம் ரூபாய் வரை அரசியல் கட்சிகள் வழங்கி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பெண்களைக் குறிவைத்து இந்த பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பை மீறி தாராளமாகப் பணம் வாரி இறைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலால் மனமுடைந்த மதுரை வடக்குத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கல்லணை, பொது மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். பல நாட்களாகத் தெருத் தெருவாக நடந்து சென்று தாங்கள் செய்த கடின உழைப்பைப் பணம் சிதைத்துவிடுமோ என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். மக்கள் பணத்தைப் பெற்றுக்கொள்ளாமல் தங்களை நம்பி வாக்களிக்க வேண்டும் என்று அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்ட போதிலும், சில இடங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பணத்தைப் பெற்று வருவதால் நேர்மையான தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
