சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளியில் நடந்த ஒரு அதிர்ச்சிகர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்குள்ள சுற்குஜா மாவட்டத்தில் டிஏவி முக்ய மந்திரி பப்ளிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் எட்டு வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பில் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கு அவசரமாக இயற்கை உபாதை வந்துள்ளது. இதனை தொடர்ந்து வகுப்பிலிருந்து ஆசிரியை நர்மதா சிங்கிடம் அந்த சிறுமி டாய்லெட் செல்ல வேண்டும் என கேட்டுள்ளார்.
இதனைக் கேட்டதும் கோபம் அடைந்த அந்த ஆசிரியை, என்ன துணிச்சல் இருந்தால் வகுப்புக்கு நடுவே டாய்லெட் செல்ல வேண்டும் என கேட்பாய் என்று கூறி தன்னிடம் இருந்த பிரம்பை வைத்து சிறுமியின் கால்களில் அடித்துள்ளார். அப்போது ஆத்திரம் தீராததால் சிறுமியை 100 முறை தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். பிரம்பில் அடி வாங்கிக் கொண்டு அதே வழியில் தோப்புக்கரணம் போட்டதால் சிறுமி வலி தாங்க முடியாமல் கீழே விழுந்து உள்ளார். அவரால் திரும்பவும் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. பள்ளி முடிந்ததும் அவரை அழைத்துச் செல்ல பெற்றோர் வந்தபோது சிறுமியால் நடக்க முடியாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிறகு விசாரித்த போது சிறுமி ஆசிரியர் செய்ததை கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிர்வாகத்திடம் முறையிட்ட போது அவர்கள் கண்டுகொள்ளாததால் உடனே பெற்றோர் தங்கள் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்தனர். பள்ளி நிர்வாகத்திடமும் புகார் அளித்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காத பள்ளி தலைமை ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இயற்கை உபாதையைக் கழிக்க முறைப்படி அனுமதி கேட்ட சிறுமிக்கு நடந்த கொடூரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
